
சிறந்த இந்தியப் படங்களை பரிந்துரை செய்யுமாறு கேட்ட வெளிநாட்டு ரசிகர்களுக்கு இயக்குநர் ராஜமௌலி, தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்படைத்தை பரிந்துரை செய்துள்ளார்.
இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக மாறியுள்ள ராஜமௌலி, தற்போது உலக அளவில் பிரபலமானவராக மாறிவிட்டார். பாகுபலி, ஆர்ஆர்ஆர் ஆகிய இரண்டு படங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுவிட்டது.
ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஏற்கனவே கோல்டன் குளோப் விருது பெற்றுள்ள நிலையில், ஆஸ்கர் விருது கிடைக்குமா என்று படக்குழு காத்திருக்கிறது. அதே போல் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தி நியூ யார்கர் என்ற அமெரிக்க பத்திரிகைக்கு ராஜமௌலி பேட்டியளித்தார். அப்போது ராஜமௌலியிடம் வெளிநாட்டு ரசிகர்கள் 5 முக்கியமான இந்திய படங்களை பரிந்துரையுங்கள் என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ராஜமௌலி, சங்கராபரணம், முன்னா பாய் எம்பிபிஎஸ், பண்டிட் குயின், பிளாக் ஃபிரைடே, ஆடுகளம் ஆகிய படங்களைக் குறிப்பிட்டிருந்தார். ராஜ்குமார் ஹிரானி, அனுராக் கஷ்யப், வெற்றிமாறன் ஆகிய இயக்குநர்களின் படங்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இதனை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர். தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ஏற்கனவே, வெற்றி மாறன் படத்தில் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in