ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2 – 0 என்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியை கைப்பற்றிய உத்வேகத்துடன் இந்திய அணி டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் களம் கண்டது. ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் இறங்கியது.
இந்நிலையில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் அடுத்ததாக, இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கத்தில் ஆட்டம் கண்டது. நட்சத்திர வீரர்கள் யாரும் ரன் சேர்க்கவில்லை.
வழக்கம் போல் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். இந்திய அணி 139 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அஸ்வின் – அக்ஷர் படேல் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது.
இந்த ஜோடி 8ஆவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய அக்சர் படேல் 74 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதாவது ஆஸ்திரேலியாவை விட ஒரு ரன் பின்னிலையில் இருந்தது.
2ஆவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2ஆம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் குவித்தது. ஆனால் இன்றைய 3ஆம் நாள் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமையவில்லை.
ஜடேஜா சுழலில் சிக்கி ஆஸ்திரேலிய அணி மள மளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணி 113 ரன்களில் ஆட்டமிழந்தது. ஜடேஜா 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அஸ்வின் 3 விக்கெட் எடுத்தார். இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 115 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
கே.எல்.ராகுல் வழக்கம்போல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி 84 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதனை தொடர்ந்து களமிறங்கிய பரத் அதிரடியாகவும் பூஜாரா நிதானமாகவும் விளையாடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர்.
இந்திய அணி 26.4 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 118 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
newstm.in