காமெடி டைம் புகழ் நடிகர் மயில்சாமி காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

ஆரம்பத்தில் மிமிக்கிரி கலைஞராக அறியப்பட்டவர் நடிகர் மயில்சாமி. 1984-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த அவர், கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட அக்கால படங்களில் நடித்தார். 2000-ம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விவேக்குடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார்.

இதுதவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நடிகர் மயில்சாமி, சினிமாவில் இயங்கி வந்தாலும் பொது சேவைகள் செய்வது, மக்களுடன் இணைந்து மக்களுக்காகவும் சில முன்னெடுப்புகளை செய்வது என இயங்கி வந்தார்.

இதன் காரணமாக நடிகர் மயில்சாமி பல மக்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றார். இதன் தொடர்ச்சியாக கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.

இந்நிலையில்தான் நடிகர் மயில்சாமி தான் வசித்துவந்த சென்னை சாலிகிராமத்தில் மாரடைப்பால் திடீரென உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியது. முன்னதாக அதிகாலையில் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் தன் குடும்பத்தினரால் சென்னை போரூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிகிறது. மருத்துவமனையில் மருத்துவர்கள் நடிகர் மயில்சாமியின் மரணத்தை உறுதி செய்தனர்.

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் திடீர் மரணம், தமிழ் சினிமாவில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.