தமிழ் சினிமாவில் தனது காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் மயில்சாமி. பல முன்னணி நடிகர்களின் குரல்களில் பேசி ரசிகர்களிடையே பிரபலமானார். சினிமாவை தவிர டிவி நிகழ்ச்சிகளில் தொப்பாளராக பணியாற்றியுள்ளார். திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களோடு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
கன்னி ராசி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், நகைச்சுவைக்கென்று தனி பாணியையே கடைப்பிடித்து வருகிறார். தமிழில் 80-களில் புகழ்பெற்ற ரஜினி, கமல் முதல் தற்போது உள்ள அஜித், விஜய், விக்ரம், விஷால், சந்தானம், சிவகார்த்திகேயன் வரை பல ஹீரோக்களோடு நடித்து வருகிறார்.பெரிய நடிகர்களாக வடிவேலு, விவேக் போன்றவர்களோடு இணைந்து காமெடியில் கலக்கியவர்.
இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சாலி கிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.
மயில்சாமி மறைவையொட்டி, நடிகர்கள் ரமேஷ் கண்ணா, மனோபாலா, டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலிக்கு பிறகு பேசிய டிரம்ஸ் சிவமணி, 57 வயதாகும் மயில்சாமி, தீவிர சிவ பக்தர். அவர் கடைசியாக கூறியது என்னவென்றால், “கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு விவேக் சாரை கூட்டிட்டு வந்தேன்..நீங்களும் வந்துட்டீங்க, ரஜினி சாரை இந்த கோயிலுக்கு கூட்டிட்டு வந்து, அவர் கையாலே சிவனுக்கு பாலூத்த வைக்கணும்..’ இது தான் அவர் எங்கிட்ட நேரில் பேசிய கடைசி வார்த்தை..என்று உருக்கமாக கூறினார்.