
எடப்பாடி பழனிசாமி பேரை கூட சொல்ல விரும்பவில்லை என்ற ஓ.பன்னீர்செல்வம், இரண்டாவது தர்மயுத்தம் தொடங்கியுள்ளதாக கூறி பரபரப்பை கூட்டியுள்ளார்.
முன்னான் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஓ.பி.எஸ். அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், 87 மாவட்ட செயலாளர்கள், 176 ஆதரவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்ட பிறகே கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டனர். இந்நிலையில் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், அதிமுகவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று உங்களுக்கு தெரியும், அவரது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன் என்றார்.
தங்கள் பிடிக்குள் கட்சியை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நடத்திய நாடகம் தோல்வியில் முடிந்தது என்று கூறிய ஓபிஎஸ், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய சட்ட விதியை காப்பாற்ற இரண்டாவது தர்மயுத்தம் தொடங்கியுள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், வேட்புமனுவை வாபஸ் பெற்று இரட்டை இலை வெற்றி பெற ஆதரவாக இருப்போம் என சொன்னோம், ஆனால் அவர்கள் ஏற்கவில்லை, மக்கள் தீர்ப்பு எனும் மகேசன் தீர்ப்பு இருக்கிறது, அது கூடிய விரைவில் வரும் என்று கூறினார்.
அதிமுக சட்டவிதியை எந்த அளவுக்கு சிதைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு சிதைத்துள்ளனர் என்று கூறிய பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளரை மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்ய முடியாது என்று கூறினார்.
newstm.in