அதிகாரிகள் சோதனை நடத்த வந்தபோது பயத்தில் சிறை கைதி ஒருவர் செல்போனை கடித்து தின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச்சை சேர்ந்த குவாஷிகர் அலி என்பவர் போதை மருந்து தடுப்புப் பிரிவு சட்டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 3 வருடங்களாக கோபால்கஞ்ச் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைதிகள் கோபால்கஞ்ச் சிறையில் தடை செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. காவல்துறையினரும் சிறையில் அடிக்கடி சோதனை செய்து செல்போன், போதை பொருள்களை பறிமுதல் செய்தனர்.
ஆனாலும் சிறையில் தடை செய்யப்பட்ட பொருள்களின் பயன்பாடு குறையவில்லை. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு போலீஸார் சிறையில் மீண்டும் சோதனை நடத்தினர். சிறையில் உள்ள குவாஷிகர் அலியிடம் செல்போன் ஒன்று இருந்துள்ளது.
செல்போனை போலீஸார் பறிமுதல் செய்தால் தண்டனை கிடைக்கும் என பயந்த குவாஷிகர் அலி தன்னிடம் இருந்த செல்போனை கடித்து அதை அப்படியே விழுங்கியுள்ளார். அடுத்த நாள் குவாஷிகர் அலிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது.
சிறை காவலர்கள் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில், அவரின் வயிற்றில் செல்போன் உதிரி பாகங்கள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குவாஷிகர் அலிக்கு அறுவை சிகிச்சை நடத்த முடிவு செய்துள்ளனர். விரைவில் உடல்நலன் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
newstm.in