ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியைத் தொடங்கினார். இதையடுத்து தனது கட்சியை விரிவுபடுத்தும் விதமாக, அவர் தெலுங்கானாவில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
அடுத்த தேர்தலில் தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வரும் ஷர்மிளா தெலங்கானா மாநிலம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பாத யாத்திரையின்போது, ஆளும் கட்சியான சந்திரசேகர ராவின் டிஆர்எஸ் மீது கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் ஷர்மிளா.
இந்த நிலையில், தெலங்கானாவின் மகபூபாபாத்தில் நேற்று யாத்திரை மேற்கொண்டிருந்த ஷர்மிளாவை ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியினர் வரவேற்றனர். இதனிடையே ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி தொண்டர்கள் ஷர்மிளாவை வரவேற்று வைத்திருந்த பேனர், கட்அவுட்டுகளை ஆளும் டிஆர்எஸ் கட்சியினர் சேதப்படுத்தி இருந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இரு கட்சியின் தொண்டர்களும் மோதிக்கொண்டதால் பதற்றம் மேலும் அதிகரித்தது. இதையடுத்து ஷர்மிளாவின் பாத யாத்திரைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை இன்று காலை போலீசார் திடீரென ரத்து செய்தனர். இதுதொடர்பாக ஷர்மிளாவுக்கு நோட்டீஸ் வழங்கினர். ஆனால், இதை ஏற்க மறுத்த ஷர்மிளா பாத யாத்திரையை தொடர்ந்து மேற்கொள்வதாக கூறியதால் அவரை போலீசார் கைது செய்து ஹைதராபாத்திற்கு அழைத்துச்சென்றனர். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திரா, தெலங்கானா அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.