ஊதியம் பிரச்னையில் சிறுமி ஒருவரை கடையின் உரிமையாளர் கத்தியால் தாக்கி முடியைப் பிடித்து நடுரோட்டில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே ஹுடியரி என்ற பகுதியில் ஓம்கார் திவாரி (47) என்பவர் நடத்தி வரும் மளிகை கடையில் 16 வயது சிறுமி ஒருவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சிறுமியிடம் ஓம்கார் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமிக்கும், ஓம்காருக்கும் இடையே சம்பள பண பிரச்னை ஏற்பட்டது. இதனால் சிறுமி வேலையை விட்டு நின்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஓம்கார் போதையில் சென்று சிறுமி வீட்டில் பிரச்னை செய்துள்ளார்.
மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியின் முதுகில் குத்தி, நடுரோட்டில் அவரது முடியை பிடித்து தரதரவென இழுத்து சென்றார். இதனை சாலையில் இருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்தனர்.
ஒருவர் மட்டும் காவல்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓம்காரை கைது செய்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் பொதுமக்கள் யாரும் அந்த சிறுமியை மீட்க எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதால் நெட்டிசன்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in