இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் ரேஷன் கடைகள் வாயிலாக மாதந்தோறும் குறைந்த விலையில் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கோவா மாநில அரசு சுமார் 80 ஆயிரம் ரேஷன் கார்டுகளை திடீரென ரத்து செய்துள்ளது. இந்த அறிவிப்பு ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேஷன் கார்டுதாரர் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து ரேஷனில் பொருட்கள் வாங்கவில்லை என்றால், அவரது பெயர் பட்டியலில் இருந்து அரசாங்கத்தால் நீக்கப்படும் என்பது அரசாங்கத்தின் புதிய விதியாகும். மேலும் அதற்கு பதிலாக, மற்றொரு ஏழை குடும்பத்துக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும்.
இந்த நிலையில் தொடர்ந்து ஆறு மாதங்களாக ரேஷன் பொருட்கள் பெறாத ரேஷன் கார்டை தற்போது கோவா அரசு ரத்து செய்துள்ளது. இந்த கார்டு வைத்திருப்பவர்கள் ஆகஸ்ட் 2022 முதல் ஜனவரி 2023 வரை ரேஷன் எடுக்காதவர்கள் ஆவார்கள். இது குறித்து குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகார இயக்குநர் கோபால் பர்சேகர் கூறியதாவது, ரேஷன் பொருட்கள் பெறாத கார்டுதாரர்களின் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன. இதனுடன், கார்டுதாரர்கள் ஏன் ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்பது குறித்தும் ரேஷன் துறை விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
கோவா மாநிலத்தில் சுமார் 13.32 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில், 80 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் எடுக்காதது பெரிய விஷயம். இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் ஏன் ரேஷன் எடுக்கவில்லை என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.