டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
முதல் இரண்டு ஆட்டங்களில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் தோல்வியை தழுவியது. எனவே, அயர்லாந்து அணியுடன் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் களம் கண்டனர்.
முதலில் இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் அபாரமாக விளையாடினர். மந்தனா 56 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது. அந்த அணியின் எமி ஹண்டர் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ரன் அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய ஓர்லா பெரெண்டர்காஸ்ட், ரேனுகா சிங் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.
அயர்லாந்து அணி 8.2 ஓவர்களில் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து நீடித்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், தற்போது இந்தியா தகுதி பெற்றுள்ளது.
newstm.in