
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் உதயநிதி பெண்களுக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை குறித்த முக்கிய உறுதியை அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு கணபதி நகர் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வாக்குசாவடியில் முதல் பெட்டியில் இரண்டாவதாக கை சின்னம் இருக்கும் என்றும், வாக்கு எண்ணிக்கையின் போது கை சின்னம் முதல் இடத்திற்கு வர வேண்டும் எனவும் கூறினார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட உதயநிதி, அதிமுக வேட்பாளரை மக்கள் விரட்டி அடிப்பதை தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் என கூறினார்.

முந்தைய ஆட்சியாளர்கள் அரசுக்கு 5 லட்சம் கோடி கடன் வைத்திருத்தார்கள். ஆனாலும் திமுக ஆட்சிக்கு வந்தபின் கொரோனா நிவாரண தொகை , பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து, மக்களை தேடி மருத்துவம், காலை சிற்றுண்டி திட்டம் இப்படி பல திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பெண்களுக்கான உரிமை தொகை 1000 ரூபாய்க்கு நான் உறுதிமொழி கொடுக்கின்றேன் என்று கூறிய உதயநிதி, பெண்களுக்கான 1000 ரூபாய் உரிமை தொகை திட்டம் 5 அல்லது 6 மாதங்களில் கொடுக்கப்படும் என்று கூறினார்.
newstm.in