உத்திர பிரதேச மாநிலத்தில் பாரதிய சுகல் தேவ் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி. இவர் ஹவாலா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் தங்கி இருக்கும் இவருக்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு சொகுசு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அதனால் அப்பாஸ் அன்சாரியுடன் அவரது மனைவி நிக்கத் பானுவும் சிறையில் தங்கி இருப்பதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்திருக்கிறார்கள்.
சிறைக்குள் கைதி ஒருவர் மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வருவது சிறைக்குள் மனைவி உடன் உல்லாசமாக இருப்பது குறித்து உயரதிகாரிக்கு புகார் சென்று இருக்கிறது. இதில் சிறை கண்காணிப்பாளர் அசோக் சாகர் பெருந்தொகையை பெற்றுக்கொண்டு அப்பாஸ் அன்சாரிக்கு உதவி வருவதையும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதையடுத்து ஆட்சியருக்கு எஸ் பி தகவல் அனுப்பி இருக்கிறார். அதன் பின்னர் ஆட்சியரும் எஸ்பியும் ரகசியமாக தனியார் வாகனத்தில் சிறைக்குச் சென்று திடீர் சோதனை நடத்தி இருக்கிறார்கள் .
அந்த சோதனைகள் சிறை கண்காணிப்பாளர் அசோக்கின் அலுவலக அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்திருக்கிறது. கதவை உடைத்து பார்த்த போது உள்ளே அப்பாஸ் அன்சாரியும் அவரது மனைவியை நிக்கத் பானுவும் இருந்துள்ளனர். அங்கு குடும்பம் நடத்திய அன்சாரி அங்கிருந்தபடியே செல்போன் மூலம் சாட்சிகளை மிரட்டுதல் ,பணம் பறிப்பு ,நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது.
இதையடுத்து அப்பாஸ் அன்சாரியிடம் இருந்த இரண்டு செல்போன்கள் , பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் , தங்க நகைகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.