தமிழக பாஜக சார்பில் கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து,நேற்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநிலத் துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது பேசிய முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன், “எங்களுக்கு குண்டு வைக்கத்தெரியும், எனவே இது போன்ற செயல் இனி நடைபெற்றால் நாங்கள் திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு வைப்போம்” என ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பேசிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன், “இந்திய ராணுவத்தில் பணிபுரியும் பிரபுவை திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் படுகொலை செய்துள்ளார். நான் உன்னை என்ன செய்தாலும் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது, எனக்கு என்னுடைய திமுக தலைவர்கள் ஆதரவாக இருக்கிறார்கள். எனவே நான் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று இதை செய்து உள்ளார்.
திமுக கொள்ளை அடிப்பதிலும், கொலை செய்வதிலும் தைரியமானவர்கள். ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுட தெரிந்தவர்கள். வெடிகுண்டு வைக்க தெரிந்தவர்கள். இது போன்ற செயல் இனி நடைபெற்றால் நாங்கள் திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு வைப்போம்” என்று பேசியிருப்பது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வெடிகுண்டு வைப்போம் என தமிழ்நாடு அரசை மிரட்டும் தொனியில் முன்னாள் ராணுவ வீரர் பேசியிருப்பது தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்க சதி எனவும், அவர் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.