தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் கவின். பிக்பாஸ் மூலம் பிரபலமான இவரின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதனால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த பிறகு :லிப்ட்’ படத்தில் நடித்தார். த்ரில்லர் பாணியில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து ஆகாஷ் வாணி என்ற வெப் தொடரிலும், ‘ஊர்குருவி’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களையடுத்து அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ‘டாடா’ படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் தமிழகமெங்கும் வெளியான டாடா படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். படம் வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்களே எழுந்தது.
மேலும் ரசிகர்கள் திரைபிரபலங்கள் படம் குறித்து பாராட்டுகளையும் கவின் நடிப்பை குறிப்பிட்டும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தனுஷ் டாடா படத்தை பார்த்து கவினுக்கு தொலைபேசி மூலம் அழைத்து பேசியுள்ளார். அதில் அவர் பேசியதை நடிகர் கவின் தனது சமூக வலைத்தளத்தில் எழுத்து வடிவில் சேர்த்து அதனுடன் நன்றியை தெரிவித்து உள்ளார்.
அதில்,“ஹாய் கவின் நான் தனுஷ் பேசுகிறேன்..
நான் கேட்டது உண்மைதானா என்று அறியவே எனக்கு சிலநேரமானது. அந்த வியப்பில் இருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. டாடா படத்தை பார்த்துவிட்டு தனுஷ் சார் எனக்கு கால் செய்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. உங்களின் படங்களை, உங்கள் திறமையை நான் திரையரங்குகளில் பார்த்து வியந்திருக்கிறேன். இன்று உங்களிடமிருந்து வந்த அழைப்பு வெறும் நன்றி தெரிவித்து ஈடு செய்திட முடியாது. வளர்ந்து வரும் நடிகர்களை பாராட்டுவதற்காக உங்களை நான் பெரிதும் மதிக்கிறேன். உங்களின் ‘வாத்தி’ திரைப்படத்திற்கும் எனது வாழ்த்துகள். உங்களின் எதிர்கால படைப்புகளை பார்க்க காத்திருக்கிறேன் சார்.” என்று கவின் குறிப்பிட்டு உள்ளார்.