1982-ல் வெளியான ‘சங்கலி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பிரபு. அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் பிரபு சிறுநீரக பிரச்னை காரணமாக சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக உள்ளார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் பிரபல திரைப்பட நடிகர் திரு பிரபு நேற்று முன்தினம் (பிப் 20) இரவு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு நேற்று காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன. அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.