மக்களுக்கு எச்சரிக்கை..!! துருக்கி தொடர்ந்து உத்தரகாண்டை ஒரு பெரிய நிலநடுக்கம் எந்நேரமும் தாக்கலாம்..!!

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் கடந்த 6-ம் தேதி அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 புள்ளிகள் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது.

இரு நாடுகளிலும் மொத்தம் உயிரிழப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் 50 ஆயிரத்து 642 பேரும், சிரியாவில் 5 ஆயிரத்து 800 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் நிலநடுக்கத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 2 வார காலமாக தீவிர மீட்பு பணிகள் நடந்து வந்த துருக்கியில் நேற்று முன்தினம் மாலையுடன் மீட்பு பணிகள் நிறைவடைந்தன.

இந்நிலையில், இந்த இரு நாடுகளை தொடர்ந்து இந்தியாவின், உத்தரகாண்ட் பகுதியில் ஒரு பெரிய, கடுமையான நிலநடுக்கம் எந்நேரமும் தாக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து முன்னணி நிலநடுக்க அறிவியலாளர் மற்றும் தேசிய புவிஇயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் தலைமை நிலநடுக்க அறிவியல் விஞ்ஞானியான டாக்டர் என். பூர்ணசந்திர ராவ் கூறும்போது, இந்தியாவில் உத்தரகாண்ட் பகுதியில் ஒரு பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியம் அதிகம் உள்ளது. அது எந்நேரமும் நடக்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து அருணாசல பிரதேசம் வரையிலான இமயமலை பகுதியிலும், சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்ற ரிக்டரில் 8-க்கும் மேற்பட்ட அளவிலான ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஏற்பட கூடிய பாதிப்பு பற்றி கூற முடியாது. ஏனெனில், புவியியல் அமைப்பு, கட்டுமானத்தின் தரம் மற்றும் மக்கள்தொகை அடர்த்தி போன்ற பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு அது இருக்கும் என கூறியுள்ளார்.

உத்தரகாண்டில் அந்த பகுதியை சுற்றி 80 நிலநடுக்க ஆய்வு மையங்கள் மற்றும் ஜி.பி.எஸ். நெட்வொர்க்குகள் செயல்பாட்டில் உள்ளன. இதில், ஜி.பி.எஸ். புள்ளிகள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், நிலத்திற்கு அடியில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அடையாளங்கள் வெளிப்பட்டு உள்ளன. சமீபத்தில் ஜோஷிமத் பகுதியில் நிலம், பூமிக்குள் மூழ்கும் சம்பவம் நடந்த நிலையில், இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பகுதியே பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் போன்ற பல்வேறு புனித ஸ்தலங்களுக்கு செல்வதற்கான நுழைவு வாயில் ஆகும். இன்னும் 2 மாதங்களில் லட்சக்கணக்கானோர் புனித பயணம் மேற்கொள்ளும் யாத்திரையான சர் தம் யாத்திரையும் தொடங்க உள்ளது.

இந்நிலையில் ராவ் கூறும்போது, 8 மற்றும் அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களே பெரிய நிலநடுக்கங்கள் ஆகும். சமீபத்திய துருக்கி நிலநடுக்கம் தொழில் நுட்ப ரீதியாக ஒரு பெரிய நிலநடுக்கம் கிடையாது. குறைந்த அளவிலான கட்டுமான தரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் துருக்கியில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார். இந்த நிலநடுக்கம் ஏற்படும் சரியான நாள் மற்றும் நேரம் பற்றி கணிக்க முடியாது என கூறப்படும் நிலையில், உத்தரகாண்ட் அரசு நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.