அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ளார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளதால், இப்போதே அமெரிக்காவில் அதிபர் தேர்தல் ஜூரம் பரவத் தொடங்கிவிட்டது.
2024 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடனே போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல, குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுபடியும் போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வந்தது. குடியரசுக் கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து வேட்பாளர் போட்டியில் நின்றுவிடக் கூடாது என்பதில் டிரம்ப்பும் கவனமாக இருந்தார்.
இதற்காக, குடியரசுக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரிடம் பேசி தனக்கு ஆதரவு டிரம்ப் திரட்டி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிடபோவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்த நிலையில் விவேக்கும் களமிறங்க உள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பே போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட சமயத்தில், அக்கட்சியில் இருந்தே அவருக்கு எதிராக பலரும் உருவாகி வருவது டிரம்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிட தற்போது தயாராகி வரும் விவேக் ராமசாமி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நிக்கி ஹாலே டிரம்ப்பை ஏதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த விவேக் ராமசாமி ?
இவர் கேரள மாநிலம் வடக்கன்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டவர். 37 வயதான விவேக் ராமசாமி “Woke, Inc.: Inside Corporate America’s Social Justice Scam” மற்றும் “Anti-Woke, Inc போன்ற சுகாதார மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களை நடத்திவருகிறார்.
1990 காலகட்டத்தில் இவரின் பெற்றோர் அமெரிக்காவில் குடியேறியிருக்கின்றனர். தற்போது விவேக் ராமசாமி அமெரிக்காவின் ஓஹியோவில் வசித்துவருகிறார். அடுத்த தலைமுறை அமெரிக்கர்களுக்கு ஒரு புதிய கனவை உருவாக்குவதற்காகவே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்திருக்கிறார்.