அனைத்து குழந்தைகளுக்கும் தரமான 3 ஆண்டுகள் மழலையர் கல்வி கிடைக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, கடந்த அக்டோபர் மாதம் 20-ம் தேதி அடித்தள நிலைக்கான பாடத்திட்ட கட்டமைப்பை (National Curriculum Framework for Foundational Stage(NCF-FS)) ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிமுகம் செய்தது.
இந்நிலையில், நாட்டில் மழலையர் கல்வி குறிக்கோளை அடைய, கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை கடந்த 9-ம் தேதி அன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில் பள்ளிக் கல்வியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6-க்கு மேல் மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளை 3 வயதில் மழலையர் வகுப்பில் சேர்க்கலாம் எனவும் 3 ஆண்டுகளுக்கு ப்ரீ- கேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய வகுப்புகளை அவர்கள் படிக்க வேண்டும் என்றும் வழிமுறைகளில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பள்ளிக் கல்விக்கு முந்தைய மழலையர் கல்வியில் 2 ஆண்டு பட்டயப் படிப்பை வடிவமைத்து நடத்துமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பாடத்திட்டம், மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் வடிவமைக்கப்பட்டு மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.