அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த விமான பணிப்பெண் ஒருவர் விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்பேனியாவில் இருந்து விமானம் ஒன்று லண்டன் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் கிரேட்டா டைர்மிஷி (24 ) என்ற இளம் பணிப்பெண் ஷிப்டில் இருந்தார். விமானம் லண்டன் விமானநிலையத்தில் தரையிறங்கிய போது பணிப்பெண் கிரேட்டா திடீரென மயங்கி விழுந்தார்.
சக பணியாளர்கள் அவரை எழுப்ப முயற்சித்தனர். ஆனால் அவர் அசைவற்று கிடந்ததால் அவசர உதவி எண்ணுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த அவசர கால பணியாளர்கள் கிரேட்டாவுக்கு முதலுதவி செய்தனர்.
ஆனால், பணிப்பெண் கிரேட்டா பரிதாபமாக உயிரிழந்தார். அவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் கிரேட்டா உயிரிழந்ததற்கு மாரடைப்பு காரணமில்லை என்றும், வயது வந்தோருக்கான திடீர் இறப்பு நோய் பாதிப்பு தான் காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
அரியவகை நோயான இது, பாதிக்கப்பட்டவர்கள் இறந்த பின்னர்தான் தெரியவரும் என்றும், இங்கிலாந்தில் மட்டும் இந்நோயால் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
newstm.in