கடந்த 2022- ம் ஆண்டு ஜூலை 11- ம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும், பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு நேற்று (பிப்.23) காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும்; அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அ.தி.மு.க. நடத்திய சட்டப்போராட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது; இனி எழுச்சியோடு கட்சிப் பணிகள் நடைபெறும். உச்சநீதிமன்றமே தீர்ப்பு கூறி விட்டதால் அ.தி.மு.க. தலைமை குறித்து இனி எந்த கேள்வியும் இல்லை.
ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அ.தி.மு.க.வுக்கு வரலாம். அ.தி.மு.க. மூன்று, நான்காக உடைந்தது என சொன்னார்கள்; தற்போது ஒரே கட்சியாக நிற்கிறோம். ஒன்றரை கோடி அ.தி.மு.க. தொண்டர்களின் பொதுச்செயலாளராக இருப்பேன். தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் இருந்த ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கி விட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற உச்சநீதிமன்றத் தீர்ப்பு உதவும்” எனத் தெரிவித்தார்.