
இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர் ராராஜி. அத்துடன் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாண முதல்வர், சென்னை மாநில முதல்வர், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர்.
பிற்காலத்தில் ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959-ல் சுதந்திராக் கட்சியை தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967-ல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்தது. இவரது கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் விவகாரத்திலும், குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்ற விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி எதிர்வினை ஆற்றியதால் சி.ஆர்.கேசவன் அதிருப்தியிலிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் காங்கிரசின் தனது அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
இதுதொடர்பாக, கட்சித் தலைவர் மல்லிகாஜூர்ன கார்கேவுக்கு கடிதம் அனுப்பியுள்ள அவர், சேவை செய்ய வேண்டும் என்பதற்காக, 2001-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து வந்து கட்சியில் இணைந்ததாகவும், ஆனால், கட்சியில் மதிப்புமிகு அடையாளத்தைத் தாம் உணரவில்லை எனக் கூறியுள்ளார்.

இனியும் இணைந்து செயல்பட முடியாது என்பதால், ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தமக்கான பாதையை உருவாக்க வேண்டிய தருணம் இது என்று கூறியுள்ளார்.
வேறு கட்சியில் சேர எண்ணம் இருக்கிறதா என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “நான் வேறொரு கட்சிக்கு செல்வதாக ஊகங்கள் நிலவி வருகிறது. ஆனால், உண்மையை சொல்லபோனால் நான் யாரிடமும் பேசவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை” என்றார்.