
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டீஸின் பதவிக்காலம் 2012-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த தம்பதியனர் புனேவில் குடியேறினர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் தேவிசிங் ஷெகாவத் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
எனினும் அவருக்கு ரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி ஷெகாவத் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கணவர் மறைவால் வாடும் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் ஆற்றிய சேவை மூலம் சமூகத்தில் தனி முத்திரை பதித்தவர் ஷெகாவத். ஓம் சாந்தி” என்று தெரிவித்துள்ளார்.
என்சிபி தலைவர் சரத் பவாரும் ஷெகாவத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், “காங்கிரஸின் மூத்த தலைவரும், புகழ்பெற்ற விவசாயியுமான தேவிசிங் ஷெகாவத் ஜியின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவர் அமராவதியின் முதல் மேயராக பணியாற்றினார்” என்று ட்வீட் செய்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் தேவிசிங் ஷெகாவத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷெகாவத் 1985-ம் ஆண்டு முதல் 1990 வரை, அமராவதி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இதைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு நடைபெற்ற அமராவதி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று மேயர் ஆனார். கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய ஷெகாவத், 1965-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி பிரதீபா பாட்டீலை மணந்தார். இவர்களுக்கு ராவ்சாகேப் ஷெகாவத் என்ற மகனும், மகளும் உள்ளனர்.