நீட் விவகாரத்தில் அதிமுக அரசு தாக்கல் செய்த ரிட் மனுவை திரும்பப்பெற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்பப் பெற தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
கிராம பகுதிகளில் உள்ள மாணவர்கள் நீட் தேர்வால் பாதிப்படைவதாகவும் நீட் தேர்வை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்கவும் அம்மனுவில் கோரியிருந்தது. நீட் தேர்வை ஒரு முறைக்கு மேல் எழுதுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், முதல் முறை நீட் எழுதும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நீர்த்துப் போன கோரிக்கைகள் அடங்கிய மனுவின் அடிப்படையில் நடைபெறும் வழக்கு விசாரணை சட்ட ரீதியில் நிலைக்காது எனக்கூறி திமுக அரசு புதிய மனுவை தாக்கல் செய்தது. கல்வி மீதான மாநில அரசின் சுயாட்சிக்கு எதிராக உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தில் நடத்தப்படும் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய மாணவர்களால் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in