கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்தவர் லட்சுமி தீப்தா(37). இவர், சில மாதங்களுக்கு முன் ஒரு ஓடிடி தளத்திற்காக வெப் தொடரை இயக்கினார். இந்த தொடரில் திருவனந்தபுரம் வெங்காணூர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் நாயகனாக நடித்தார். இந்நிலையில் அந்த வாலிபர் திருவனந்தபுரம் அருவிக்கரை போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருந்தது: ஒரு சஸ்பென்ஸ் வெப் தொடரில் என்னை நாயகனாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்தார்கள்.
அதில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் நான் கையெழுத்து போட்டேன். இது தொடர்பாக அந்த வெப் தொடரின் இயக்குனரான லட்சுமி தீப்தாவும், ஓடிடி தளத்தை சேர்ந்த சிலரும் தான் என்னை அணுகினார்கள். பல நாட்கள் படமாக்கப்பட்ட பின்னர் தான் அது ஒரு ஆபாச வெப் தொடர் என தெரியவந்தது. அதனால் நான் நடிக்க மறுத்தேன். ஆனால் ஒப்பந்தத்தில் நான் கையெழுத்து போட்டிருப்பதாக கூறி என்னை மிரட்டி அதில் நடிக்க வைத்தனர். அந்த தொடரை ஒளிபரப்ப ஓடிடிக்கு தடை விதிக்க வேண்டும். தொடர் ஒளிபரப்பப்பட்டால் என்னுடைய குடும்ப வாழ்க்கை கடுமையாக பாதிக்கும். இவ்வாறு அந்த வாலிபர் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து இயக்குனர் லட்சுமி தீப்தா மற்றும் ஓடிடி உரிமையாளர்கள் மீது அருவிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே இயக்குனர் லட்சுமி தீப்தா முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இயக்குனர் லட்சுமி தீப்தாவை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் விசாரணை நடத்திய பின்பு போலீசார் அவரை நெடுமங்காடு கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். நெடுமங்காடு கோர்ட்டு டைரக்டர் லட்சுமி தீப்தாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.