மக்களிடையே அதிகம் பிரபலமான எஸ் வரிசையில் ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. எஸ்23, எஸ்23 பிளஸ், எஸ்23 அல்ட்ரா ஆகிய மூன்று வகையான ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதுவரை வெளியிடப்பட்ட எஸ் வரிசை ஸ்மார்ட்போன்களிலேயே, இந்த எஸ்23 வரிசை போன்கள் சக்தி வாய்ந்தவை என்றும், சாம்சங் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஸ்நாப்டிராகன் 8, ஜென் 2 செயலியில் இயங்கக் கூடியவை. ரூபாய் 75,000 முதல் ரூபாய் 1,55,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம், கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக்கினாலும், இயற்கை வண்ணங்களைக் கொண்டும் தயாரிக்கப்பட்டவை.
இரவிலும் தெளிவாகப் படம் பிடிக்கக் கூடிய 12 மெகா பிக்சல் முதல் 200 மெகா பிக்சல் திறன் கொண்ட 16 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கேமராக்கள் உள்ளன. ஒரு செல்ஃபி கேமராவும், மூன்று பின்பக்க கேமராக்களும் உள்ளன. 6.1 முதல் 6.8 அங்குலத் திரைக் கொண்டதாகவும், கடினமான கார்னிங் கொரில்லா விக்டஸ் 2 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆர்மர் அலுமினிய ஃபிரேமுடன், பான்தம் பிளாக், காட்டன் ஃபிளவர், மிஸ்டிக் லைலாக், பொட்டானிக் கிரீன் ஆகிய நான்கு வண்ணங்களில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும். வேகமாக சார்ஜ் ஆகக் கூடிய 3900 மில்லியன் ஆம்ப் முதல் 5,000 மில்லியன் ஆம்ப் சக்திக் கொண்ட பேட்டரிகளுடன், இந்த போன்கள் விற்பனைக்கு வந்துள்ளனர்.