சென்னை தாம்பரம் அருகே அறையில் ஏசி போட்டு கஞ்சா வளர்த்து வந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
போலீஸார் கஞ்சா வாங்குவது போல் நடித்து, விற்பவர்களை பிடித்து விசாரித்த போது, மாடம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து மொத்த விற்பனையாக வாங்கி விற்று வருவதாக தெரிவித்தார். இதையடுத்து அடுக்குமாடிக்குடியிருப்பை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அதனைத் தொடர்ந்து குடியிருப்பில் பதுங்கியிருந்த சக்திவேல், ஷ்யாம் சுந்தர், ஸ்ரீகாந்த் மற்றும் நரேந்திரகுமார் ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். அப்போது வீட்டில் சோதனையிட்ட போது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உயர் ரக கஞ்சா செடிகளை கொடைக்கானல் போல் அறையை செட் செய்து, 24 மணி நேர ஏசி கூலிங்கில் வளர்த்து வந்ததைக் கண்டுபிடித்தனர். பிடிபட்டவர்களில் முக்கிய நபரான சக்திவேல் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
கஞ்சா வளர்ப்பது குறித்து யூடியூப்பில் பார்த்து தெரிந்து கொண்டு இவ்வாறு செய்து வந்துள்ளார். 10க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை 4 அடி உயரத்திற்கு வளர்த்துள்ளார். கஞ்சா செடியின் வாசனை பக்கத்து வீடுகளுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதற்காக பல்வேறு யுக்திகளையும் கையாண்டுள்ளார்.
இதுமட்டுமின்றி சக்திவேல் போதை ஸ்டாம்புகளையும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார். ஆன்லைன் விற்பனைக்கு ரயில்வேயில் வேலை செய்து வந்த ஷ்யாம் சுந்தர், நரேந்திரகுமார் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் உதவியை நாடியுள்ளார்.
அவர் கடந்த 4 வருடமாக பக்கத்து வீட்டினருக்குக் கூடத் தெரியாமல் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள், 356 போதை ஸ்டாம்புகள் மற்றும் 3 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
newstm.in