தோல்வி அடைந்த படத்தின் மீதி சம்பளத் தொகையை நடிகை சம்யுக்தா வாங்க மறுத்துவிட்டார் என்று மலையாள தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் புகழ்ந்துள்ளார்.
வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி ஹிட் ஆனது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. வாத்தி பட வெற்றிக்கு பிறகு நடிகை சம்யுக்தாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இவர் லக்கி நடிகை என்றும் தெலுங்கில் அழைக்கப்படுகிறார். இவர் திரைப்பயணம் தொடங்கியது மலையாளத்தில்தான். இவர் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் எடக்காடு பட்டாலியன் 06 என்ற படத்தில் சம்யுக்தா நடித்தார். அந்த படம் சரியாக ஓடவில்லை.
எனவே, நடிகை சம்யுக்தா அந்த படத்திற்கு தனது ஒரு பகுதி சம்பளத்தை மட்டுமே வாங்கினார் என தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் கூறியுள்ளார். எடக்காடு பட்டாலியன் 06 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் 65 சதவீதம் சம்பளத்தை சம்யுக்தாவுக்கு கொடுத்துவிட்டனர். மீதி சம்பளத்தை டப்பிங் பேசிய பிறகு தருவதாக சொல்லியிருந்தனர்.
அதில் தாமதம் ஏற்பட்டு படம் திரைக்கு வந்துவிட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டது. திடீரென ஒரு நாள் செல்போனில் மெசேஜ் அனுப்பிய சம்யுக்தா படம் சரியாக போகாததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும், மீதி சம்பளம் வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக நல்ல கதை அமையும்போது மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் என்று தயாரிப்பாளரிடம் சொல்லியிருக்கிறார். அவர் கூறியதை கேட்டு வியந்து போனதாக தயாரிப்பாளர் சாண்ட்ரா தெரிவித்துள்ளார்.
newstm.in