நாமக்கல் அழகுநகரில் உள்ள தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை திடீரென ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி, குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநீற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக சில ஊர்களில் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், முதல்வரின் பிறந்த நாளான மார்ச் 1ஆம் தேதி மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. அந்த வகையில் நாமக்கல் நகராட்சியிலும் 2ஆம் கட்ட திட்டமானது மார்ச் 1ம் தேதி தொடங்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் உள்ள மொத்தம் 2,594 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அழகுநகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
உணவு எவ்வாறு உள்ளது என்பது குறித்து குழந்தைகளுடன் கேட்டறிந்த அவர், பின்னர் குழந்தைகளுடன் அமர்த்து காலை உணவை சாப்பிட்டார். ஆய்வின்போது வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
newstm.in