பாஜக எம்.எல்.ஏ-வின் மகன் ஒப்பந்ததாரரிடம் 40 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய போது சிக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் பாஜக தலைவர்கள் சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பாஜக எம்.எல்.ஏ மதல் விருபாக்சப்பா சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரது மகன் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
தாவன்கிரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்சப்பா, கர்நாடகா அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இவரின் மகன் பிரசாந்த் மதல் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர் கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட்டின் டெண்டர் வழங்க ஒருவரிடம் இருந்து ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லோக்ஆயுக்தா போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, அலுவலகத்தில் இருந்து ரூ.1.70 கோடியும், வீட்டில் இருந்து ரூ.6 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது.
கர்நாடகாவில் இன்னும் மூன்று மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே கருத்துக் கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதுபோன்று பாஜக தலைவர்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
newstm.in