சென்னை மெட்ரோ ரயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்பு 20 மணி நேரத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டுள்ளது.
நேற்று காலை 8 மணி அளவில் சென்ட்ரல் – விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அனைத்து மெட்ரோ ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
இதனையடுத்து, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அதனை சரிசெய்யும் பணி தொடங்கப்பட்டது.
அதனால் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டது. விமான நிலையம் செல்வோர் ஆலந்தூரில் இறங்கி விமான நிலையம் சென்றனர். அதே போல் மறுமார்க்கமாக சென்ட்ரல் செல்வோரும் ரயில் மாறி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதுமட்டுமல்லாமல், நடுவில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ரயில்கள் நிறுத்தி நிறுத்தி இயக்கப்பட்டன. பீக் அவர்ஸ் என்று சொல்லப்படும் காலை 8 மணிக்கு கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
ரயில்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நேற்று காலை தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி தொடங்கப்பட்ட நிலையில், அது இன்று காலை முடிவுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து 20 மணி நேரத்திற்கு பிறகு தற்போது சென்னையில் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
newstm.in