சிவகங்கை மாவட்டம் கீழடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் இன்றும் நாளையும் மதுரையை மையமாக வைத்து தமிழக முதல்வர் அரசு திட்டங்களை ஆய்வு செய்கிறார். அதன்படி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் நடந்து முடிந்த பணிகளை ஆய்வு செய்ய இருக்கிறார்.
இதற்காக மதுரை வந்த முதல்வர், பின்னர் சிவகங்கை மாவட்டம் கீழடியில் சுமார் 18 கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.
கீழடி அருங்காட்சியகம் 2 ஏக்கர் பரப்பில் ரூ.18.43 கோடி செலவில், 31 ஆயிரம் சதுரஅடி பரப்பில் தமிழர் பெருமையை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தில் ‘மதுரையும் கீழடியும்’, ‘வேளாண்மையும் நீர்மேலாண்மையும்’ உள்ளிட்ட 6 தலைப்பின் அடிப்படையில் தனித்தனி கட்டடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றினையும், கீழடியின் முக்கியத்துவத்தையும் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் 15 நிமிடஒளி ஒலிக்காட்சியுடன் இதுவரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஆறு கட்டிட தொகுதிகளிலும் இரண்டு இரண்டு தளங்கள் லிப்ட் வசதியுடன் கட்டப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தின் வெளியில் நான்கு மாடங்களுடன் கூடிய தெப்பகுளம், கல்மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. உலக தரம் வாய்ந்த அளவில் பொருட்களை காட்சிப்படுத்தபட்டுள்ளது.
newstm.in