தமிழ்நாடு முழுவதும் வரும் 10ஆம் தேதி ஆயிரம் இடங்களில் காயச்சல் முகாம் நடத்தப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு காய்ச்சல், தொண்டை வலி அதிகரிக்க வழக்கமான வைரஸ் பாதிப்புகளில் ஏதேனும் உருமாற்றங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
இது உயிர்க்கொல்லி வைரஸ் அல்ல, மக்கள் அச்சப்பட வேண்டாம், காய்ச்சல் இருந்தால் சொந்தமாக மருந்து எடுத்து கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் 10ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதில், 200 முகாம்கள் சென்னையில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in