ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த பத்மராஜன், கடந்த 1988-ம் ஆண்டு முதல் இதுவரை 233 தேர்தல்களில் களம் கண்டுள்ளார். ஒவ்வொரு முறையும், தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் தேர்தலில் போட்டியிட்டு தேசிய அளவில் நரசிம்மராவ், வாஜ்பாய், ராகுல்காந்தி உள்ளிட்ட பல தலைவர்களை எதிர்த்தும், தமிழகம் அளவில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை எதிர்த்தும் போட்டியிட்டுள்ளார்.
தற்போது 233 ஆவது முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். ஒவ்வொரு முறையும் தமிழகம் மட்டும் இல்லாமல் தேசிய அளவில் நரசிம்மராவ், வாஜ்பாய், ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்களை எதிர்த்தது களத்தில் நின்றுள்ளார். தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டுள்ளார். இதுவரை 1988 ல் தொடங்கி 32 எம்.பி தேர்தல்கள், 6 ஜனாதிபதி தேர்தல்கள், 6 துணை ஜனாதிபதி தேர்தல்கள், 72 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளார் பத்மராஜன். மேலும் கர்நாடகா தேர்தல், பஞ்சாயத்து தலைவர் தேர்தல், வார்டு உறுப்பினர் தேர்தல், கூட்டுறவு தேர்தல் என எதையும் விட்டுவைக்கவில்லை பத்மராஜன்.
உறவினர்கள் கிண்டல் அடித்த நிலையிலும், விடா முயற்சியுடன் அனைத்து தேர்தல்களையும் எதிர்கொண்ட அவர், பின்னர் அதனை பழக்கமாகவே மாற்றிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேர்தல் மன்னன் பத்மராஜன் கூறுகையில், “நான் போட்டியிடும் எந்த தேர்தலிலும் வெற்றிப் பெறக் கூடாது. எனது மூன்றரை வயது மகனை வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்து உலக சாதனை படைத்துள்ளேன். சாதாரண குடிமகனும் தேர்தலில் போட்டியிடலாம் என்பதை உணர்த்தவே போட்டியிடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில் 6 வாக்குகள் வாங்கி இருந்தார் பத்மராஜன். இதைத்தொடர்ந்து சற்றும் மனம் தளராத பத்மராஜன் தனக்கு வாக்களித்த அந்த 6 பேருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.