தமிழ்நாடு போக்குவரத்துத்துறை பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை குறைக்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்திருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58ஆக இருந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 60ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
2021 மே 31ஆம் தேதிக்குள் ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வு வயது பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டதால் போக்குவரத்துத்துறையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண் பார்வை கோளாறு, முதுமையினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளால் பேருந்துகளை இயக்கும் போது சிக்கல் ஏற்படுவதால் பலர் விருப்ப ஓய்வு பெற்று செல்வதாகவும், விபத்துகள் ஏற்படும் சூழல் உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது.
எனவே ஓய்வு பெறும் வயது 58ஆக இருந்தால் போதும் என தொழிலாளர்கள் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்துத்துறை பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58ஆக குறைக்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்திருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் விரைவில் முடிவு எடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். அதுசார்ந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
newstm.in