பெண் என்றால் திருமணத்தன்று தலை குனிந்து இருக்க வேண்டும், நடனமாடக் கூடாது என்று நடிகர் மாரிமுத்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் எதிர்மறை வேடத்தில் நடித்துவரும் மாரிமுத்து தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். சமீபத்தில் ட்விட்டரில் பெண் என ஒருவரை நம்பி இவர் தனது தொலைபேசி எண்ணை பகிர்ந்தார். அந்த விவகாரம் பேசு பொருளானது.
அது மாரிமுத்துவின் நம்பர் தான் என ட்ரூ காலர் ஆப் மூலம் நெட்டசன்கள் உறுதி செய்தனர். ஆனால், அது எனது அப்பாவின் ட்விட்டர் கணக்கு இல்லை, போலியானது என மாரிமுத்துவின் மகன் விளக்கம் அளித்தார்.
ஆனால் மாரிமுத்துவோ, ஒரு பொண்ணு நம்பர் கேட்டால் கொடுப்பதில் என்ற தவறு என்று கேள்வி எழுப்பி பகீர் கிளப்பினார். நான் பயந்தவன் கிடையாது என்றும் அவர் பேசியிருந்தார்.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மாரிமுத்து மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். பேட்டி ஒன்றில் மாரிமுத்து பெண் குறித்து பேசியது ட்ரெண்டாகி வருகிறது. அதில், தமிழ் மணப்பெண் ஆடிக்கிட்டே வந்து மணவறையில் தாலி வாங்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
கல்யாணத்தன்று பெண் தலை குணிந்து நடந்தால் தான் அழகாக இருக்கும். தலை குனிந்து நடப்பதுதான் பெண்ணுக்கு அழகு என்று பேசினார். அதற்கு நெறியாளர் பெண் நடனம் ஆடுவதும் அழகு என்று கூறினார்.
அதற்கு நீங்கள் தமிழரா என்று நெறியாளரையே மாரிமுத்து கேள்வி எழுப்பினார். ஆணுக்கு அரையடி பின்னே பெண் நடந்துவருவதுதான் அழகு. இது பிற்போக்கு அல்ல. முற்போக்கு என்று பேசி மாரிமுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள சச்சின் பட இயக்குநர் ஜான் மகேந்திரன், மிக கேவலமான மனநிலை, பிற்போக்கின் உச்சம் என விமர்சித்துள்ளார்.
newstm.in