
பிள்ளைகள் கவனிக்காததால் முதியவர் ஒருவர் தனது 1.5 கோடி ரூபாய் சொத்தை மாநில அரசுக்கு எழுதி வைத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் பதானா கிராமத்தை சேர்ந்த நது சிங் (85) என்ற முதியவருக்கு ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி சில மாதங்களுக்கு முன் உயிரிழந்துவிட்டார். மனைவி உயிரிழந்ததையடுத்து நது சிங் தனியாக வாழ்ந்து வந்தார்.
5 பிள்ளைகள் இருந்தபோதும் தன்னை யாரும் கவனிக்காததால் இவர் தனது கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்ந்தார். அங்கும் அவரை வந்து பிள்ளைகள் பார்க்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அந்த முதியவர் தனது சொத்து அனைத்தையும் உத்தரபிரதேச அரசுக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.

தனது மறைவுக்கு பின் கிராமத்தில் உள்ள தனது வீடு, 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உள்ளிட்ட சொத்துக்களை மாநில அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நதுசிங் தெரிவித்துள்ளார். மேலும், தன் நிலத்தில் பள்ளிக்கூடம் அல்லது மருத்துவமனை கட்ட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தன் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கியுள்ள நதுசிங், தனது இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் மகன், 4 மகள்களும் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்றும் உயில் எழுதி வைத்துள்ளார். நதுசிங்கின் சொத்துக்கள் அவரது மறைவுக்கு பின் மாநில அரசின் கீழ் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in