
வீட்டின் அறையில் ஏசி வெடித்து தாய் மற்றும் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சக்திநகர் என்ற ஊரில் சித்தலிங்கையா சுவாமி என்பவர் மனைவி ரஞ்சிதா, 13 வயது குழந்தை மிருதுளா, 6 வயது குழந்தை தார்ணியா ஆகியோருடன் வசித்து வந்தார்.
பெறியாளரான சித்தலிங்கையா சுவாமி இரவுப்பணிக்கு சென்றுவிட்டதால், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மின்கசிவு ஏற்பட்டு ஏசி திடீரென வெடித்தது. ஏசி வெடித்ததால் ஏற்பட்ட தீ வீடு முழுவதும் பரவியது.

இதில் ரஞ்சிதா மற்றும் குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். அக்கம்பக்கத்தினர் காப்பாற்ற முயற்சித்தும் பலன் இல்லை. இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதே போல் தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினரும், தீயணைப்புதுறையினரும் நிகழ்விடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். பணியில் இருந்த சித்தலிங்கையா சுவாமிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மூவரின் உடலையும் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in