சென்னையில் ஆவின் பால் நிறுவனம் மூலம் 14.50 லட்சம் லிட்டர் பால் தினமும் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு நேற்று (மார்ச் 30) பால் விநியோகம் செய்யக்கூடிய அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகாலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு பால் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து விசாரணை நடத்திய ஆவின் நிர்வாகம், அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இயந்திரக் கோளாறு காரணமாக சில பகுதிகளுக்கு பால் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பொறியியல் பிரிவு உதவிப் பொது மேலாளரை சஸ்பெண்ட் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, உரிய விசாரணை நடத்தவும் ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.