
காரைக்கால் ராஜாத்தி நகரைச் சேர்ந்த கைலாஷ் என்பவர், பெரமசாமிப் பிள்ளை வீதி நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் போலி நகைகளை விற்க முயன்ற சம்பவம் தொடர்பாக காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து நகையை விற்க வந்தோரை கைது செய்து போலீஸார் விசாரித்தனர். இவ்விசாரணையில் ஏற்கனவே மோசடி வழக்கு ஒன்றில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் ஜெஸ்மாண்ட், அவரது தோழியும் காரைக்கால் தொழிலதிபரான புவனேஸ்வரி ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து ஜெரோம் ஜெஸ்மாண்டை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்காலில் உள்ள புதுவை பாரதியார் கிராம வங்கியில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பில் போலி நகை அடகு வைக்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் சார்பில் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவத்திலும் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு தொடர்பு இருப்பது போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இவர்கள் காரைக்கால் மட்டுமின்றி புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் அடகுக் கடைகள், வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கான ரூபாய் பெற்றிருப்பதாக போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம், அவரது பெண் நண்பர் புவனேஷ்வரி உட்பட பத்து பேரை காரைக்கால் போலீஸார் கைது செய்து புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் காலாப்பட்டு மத்திய சிறையிலுள்ள புவனேஷ்வரி சிறையில் தனக்கு பால் தரவேண்டும், புது டம்ளர் தரக்கோரி ஜெயிலரிடம் வலியுறுத்தினார். ஆனால் சிறையிலுள்ள அனைவருக்கும் ஒரே பாத்திரம்தான் என்றும், விதிமுறைப்படி பால் தர இயலாது என்று தெரிவித்ததால் சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதே போல் சிறையிலுள்ள தனது ஆண் நண்பர் ஜெரோமை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். ஆனால் கணவர், மனைவியாக இருக்கும் பட்சத்தில்தான் சிறையில் சந்தித்து பேச முடியும் என்று சிறையில் தெரிவித்துள்ளனர். அதற்கான சான்று தந்தால் அனுமதிப்பதாக மறுத்துள்ளனர். இதனால் தகராறிலும் புவனேஷ்வரி ஈடுபட்டார். இந்த நிலையில் புவனேஸ்வரிக்கு மத்திய சிறையில் சலுகை காட்டுமாறு, ஜெயில் சூப்பிரண்டுக்கு பணம் பார்சல் ஒன்று வந்தது. அதை பிரித்து பார்த்த சூப்பிரண்டு பாஸ்கர், இதை அனுப்பியது யார் என்பது தொடர்பாக விசாரித்து வருகிறார். தற்போது புவனேஷ்வரி காலாபட்டிலுள்ள பெண்கள் சிறையில் உள்ளார். அவரது ஆண் நண்பர் ஜெரோம் கைதிகள் அறையொட்டிய மருத்துவமனையில் உள்ளார். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதால் ஜெரோம் எஸ்ஐ பதவியிலிருந்து டிஸ்மிஸ் அண்மையில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.