திரைப்படங்களில் ஒழுக்கத்தையும், அறநெறிகளையும் மீறாத வகையில் காட்சிகள் இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்துவதற்காக இந்தியத் திரைப்பட தணிக்கைக் குழு அமைக்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டில் திரைப்படத் தணிக்கைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை திருத்துவதற்காக, 2023-ஆம் ஆண்டு ‘ஒளிப்பதிவு திருத்த மசோதாவை’ அறிமுகப்படுத்துவதற்கான தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திரைப்படங்களின் சான்றிதழ் வழங்கும் செயல்முறையை மேம்படுத்தவும், திரைப்படத் திருட்டு அச்சுறுத்தலை முழுமையாகக் கட்டுப்படுத்தவும் ஒளிப்பதிவு சட்டம், 1952 இல் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலம் திரைப்படங்களின் அங்கீகரிக்கப்படாத நகல்களை அனுப்பும் இணையதளங்களை அரசு தடுக்க முடியும்.
ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023ல் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள்:
* திரையரங்குகளில் கேம்கார்டிங் மூலம் திரைப்படங்கள் திருட்டுகளை கண்காணிக்கவும், திருட்டுத்தனமான நகலெடுக்கப்படுவதை தடுக்கவும் முடியும். அதையும் மீறி திருட்டு நகல் எடுப்பது, அங்கீகரிக்கப்படாத ஒளிபரப்பு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை விதிகளும் மசோதாவில் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் திரைப்படங்களை திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்யும் இணையதளங்களை அரசால் தடுக்க முடியும்.
* வயது அடிப்படையிலான சான்றிதழ்: தற்போதுள்ள UA வகையை மேலும் மூன்று வயது அடிப்படையிலான பிரிவுகளாகப் பிரிக்கப்பட உள்ளது. அதாவது, யுஏ சான்றிதழ் முறையில் ஏழு வயதிற்கும் மேல் (UA 7+), பதிமூன்று வயதிற்கும் மேல் (UA 13+), மற்றும் பதினாறு வயதிற்கும்மேல் (UA 16+) என பிரிக்கப்பட உள்ளன. இது தங்களது குழந்தைகள் அத்தகைய படத்தைப் பார்க்க வேண்டுமா என்பதைப் பெற்றோர் பரிசீலிக்க மட்டுமே பரிந்துரைக்கப்படும்.
* தொலைக்காட்சிக்கான திரைப்பட வகை மாற்றம்: இனி தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கான திருத்தப்பட்ட திரைப்படத்தின் மறுசான்றிதழ் வழங்கப்படும். ஏனெனில் தடையற்ற பொது திரைப்படங்கள் மட்டுமே தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும்.
மேலும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) சான்றிதழ்கள் செல்லுபடி காலம், திரைப்படங்களுக்கான தணிக்கையில் மத்திய அரசின் மறுபரிசீலனை அதிகாரத்தை நீக்குதல் போன்ற பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.