யாருக்கெல்லாம் 8 மணியிலிருந்து 12 மணி வேலை நேரம் பொருந்தும்?

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தொழிலாளர் வேலை நேர மசோதா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இப்போது கொண்டு வந்திருக்கின்ற 65-ஏ சட்டத் திருத்தம் என்பது, பொதுவாக இன்றைக்கு இருக்கக்கூடிய உலகளாவிய சூழ்நிலையில் புதிய முதலீடுகள் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் வருகின்றபோது, மற்ற மாநிலங்களுடன் ஒப்படுகையில் தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் நம்முடையை வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத்தன்மை (flexibility) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

குறிப்பாக, பெண்களுக்கு அதிகமாக வேலைவாய்ப்புகள் உருவாகக் கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற நெகிழ்வுத்தன்மையை எந்தெந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என்று பார்த்தால், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கூறியதைப் போல, அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருத்தமானது அல்ல. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

உதாரணமாக, மின்னணுவியல் துறையில் (Electronics Industries) இருக்கக்கூடிய நிறுவனங்கள், Non leather shoe making என்று சொல்லக்கூடிய தோல் அல்லாத காலணிகள் உற்பத்திச் செய்யக்கூடிய தொழில்கள், Electronic clusters அல்லது மென்பொருள் துறை (Software) இவ்வாறான தொழில்களில் பணியாற்றக்கூடியவர்கள், அவர்கள் வேலை பார்க்கும் சூழலுக்கு ஏற்ற வகையில், அங்கு பணியாற்றுபவர்கள் விரும்பினால், இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம்.

இதனால், வாரத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த வேலை மணி நேரங்கள் என்பது மாறாது. இந்த மசோதாவின்படி வேலை செய்பவர்கள், 4 நாட்கள் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அந்நாட்களில் வேறு பணிகளையும் அவர்கள் பார்க்கலாம்.

இன்றையச் சூழலில் மாறியிருக்கின்ற Working Condition-ல், இந்த நெகிழ்வுத்தன்மை அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த மசோதா எந்த தொழிற்சாலைகளுக்குப் பொருந்தும் என்பது குறித்த கொள்கைகள் அரசால் வகுக்கப்பட்டு அதன் மூலம் தெரிவிக்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வாய்ப்பை தன்னார்வமாக யார் விரும்புகிறார்களோ, அதை தேர்வு செய்யும் உரிமை வழங்கப்படும்.

ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களை மாற்றுவதாக இது அமையாது. இதை நடைமுறைப்படுத்தும்போது, எந்த இடத்தில் பணியாற்றுகின்றனர், அந்த தொழிலின் வேலை சூழல் என்ன என்பது குறித்து பார்க்கப்படும். உதாரணத்துக்கு, பொறியியல் சார்ந்த தொழிற்சாலை தளத்துக்கும், எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை தளத்துக்கும் மிகப் பெரிய அளவில் வித்தியாசங்கள் இருக்கிறது. பணியாளர்கள் வேலை பார்க்கும் தளத்திற்கு இடையே உள்ள தூரம் என்ன என்பது குறித்து பார்க்கப்படும்.

12 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்றால், அதற்கேற்ற வசதிகள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு செய்யப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் இருந்தால் மட்டுமே இதற்கான அனுமதி வழங்கப்படும். உடனடியாக இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற சூழ்நிலைகள் இல்லை” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.