
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் வேட்பாளர்களைக் களமிறக்கினர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.
அவருக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது. அதேபோல், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், புலிகேசி நகர், கோலார் தங்கவயல், காந்திநகர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில், புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆதரவு பெற்ற அன்பரசனின் மனு ஏற்கப்பட்டது. இந்த தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியனின் மனு நிராகரிக்கப்பட்டது.
ஆனாலும் காந்திநகர் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவுடன் மனுத் தாக்கல் செய்த குமாரின் மனு அதிமுக வேட்பாளராகவும், கோலார் தங்கவயல் தொகுதியில் ஆனந்தராஜ் மனு சுயேச்சையாகவும் ஏற்கப்பட்டது.
இந்நிலையில், காத்திநகர், கோலார் தங்கவயல் சட்டமன்றத் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் வாபஸ் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதால், வாபஸ் பெற ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளது.
newstm.in