
பிரதமர் மோடி நாளை 24-ம் தேதி மற்றும் 25-ம் தேதி ஆகிய நாட்களில் டெல்லி தொடங்கி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 7 நகரங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.
இதன்படி அவரது சுற்றுப்பயணம் டெல்லியில் தொடங்கி, மத்திய இந்திய பகுதியான மத்திய பிரதேசத்திற்கு முதலில் அவர் செல்கிறார். ரேவா நகரில் தேசிய பஞ்சாயத்து ராஜ் திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன்பின்பு, ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அவர் அர்ப்பணிக்கிறார். பின்னர், தென்னிந்திய பகுதியான கேரளாவுக்கு அடுத்த நாள் காலை 10.30 மணியளவில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார்.
அவர் இந்த பயணத்தில், 11 மாவட்டங்களை இணைக்க கூடிய வகையிலான, திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையேயான கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயிலை அவர் தொடங்கி வைக்கிறார். அதன்பின் காலை 11 மணியளவில், திருவனந்தபுரம் நகரில் ரூ. 3,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு அவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதனை தொடர்ந்து, குஜராத்தின் சூரத் நகர் வழியாக அவர் சில்வாசா நகரத்திற்கு செல்கிறார். அந்த நகரில், ரூ. 4,850 கோடிக்கும் கூடுதலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
அதன்பின்பு மேற்கு பகுதியில் அமைந்த டாமனுக்கும் சென்று விட்டு, இறுதியாக டெல்லிக்கு திரும்ப இருக்கிறார். அவருடைய இந்த பயணத்தில், 7 வெவ்வேறு நகரங்களுக்கு சென்று 8 நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டு உள்ளார்.