தமிழ்நாடு சட்டபேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. துறை ரீதியான அறிவிப்புகளை வெளியிட்டு, அமைச்சர்கள் உரையாற்றியும், உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்தும் வருகிறார்கள். அந்த வகையில், நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் இந்த சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.
அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே தொழிலாளர்கள் ஒரு நாளில் அதிகபட்சமாக 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதி வழங்கும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் அதிகபட்ச பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 நேரமாக மாற்றும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
சட்ட மசோதா குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் கணேசன், எந்த தொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் கொண்டு வரப்படும். 12 மணி நேரம் வேலை என்பதை தொழிலாளர்களும், தொழிற்சாலைகளும் தேர்வு செய்து கொள்ளலாம். தொழிற்சாலைகளுக்கு ஏற்ப நெகிழ்வுத் தன்மை வேண்டும் என்பதற்காக இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்துவிட்டது என்பதற்காக தமிழகத்தில் கொண்டுவரப்படவில்லை என்றும் அமைச்சர் கணேசன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்கள் சில சலுகைகளை அரசிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும், இதன்மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றார். தொழிலாளர்களை 12 மணிநேரம் வேலை செய்யவேண்டும் என்று நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.