இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனக்கு இரண்டாவது குழந்தையாக மகன் பிறந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.
விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு ஏற்கெனவே வமிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டில் அவர் பிறந்தார். இந்நிலையில் தற்போது தனக்கு இரண்டாவதாக மகன் பிறந்திருப்பதாக கோலியே தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, “இதயம் நிறைந்த அன்போடும் அளவுகடந்த மகிழ்ச்சியோடும் நாங்கள் இதை அறிவிக்கிறோம். கடந்த பிப்ரவரி 15-ம் தேதி எங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான் என்கிற செய்தியை உங்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறோம்.

எங்களின் செல்ல மகன் அகாய், அதாவது வமிகாவின் சகோதரனை இந்த உலகிற்கு அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாழ்வின் இந்த அழகான தருணத்தில் உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் வேண்டுகிறோம்.
அதேநேரத்தில் எங்களின் தனிமனித சுதந்திரத்தை மதிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்” என விராட் கோலி ஒரு அறிக்கையைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பங்கேற்கவில்லை எனக் கூறி விராட் கோலி விலகியிருந்தார். அப்போதே பல்வேறு விதமான யூகங்கள் எழுந்திருந்தன. “விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் தங்களின் இரண்டாவது குழந்தையை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் கோலி டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறார்” என கோலியின் நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான டிவில்லியர்ஸ் கூறியிருந்தார்.

பின் சில நாள்கள் கழித்து அவரே தான் கூறிய கருத்தில் உண்மையில்லை என்றும் கூறி பின்வாங்கியிருந்தார். இந்நிலையில், யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விராட் கோலியே தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
மகன் பிறந்திருப்பதாக அறிவித்திருக்கும் கோலிக்கு ரசிகர்கள் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வாழ்த்துகள் அனுஷ்கா – விராட்!