மேற்கு வங்கத்தின் அசான்சோல் தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளர் பவன் சிங் விலகல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போஜ்புரி பாடகர் பவன் சிங், சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்ததால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக கடந்த 2-ம் தேதி வெளியிட்டது. இதில், 195 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றன. இதில், மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் தொகுதியில் பிரபல போஜ்புரி பாடகர் பவன் சிங் (38) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, சமூக ஊடகங்களில் இவரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். பவன் சிங் பாடிய பல திரைப்பட பாடல்கள், வங்காள பெண்களை கிண்டல் செய்தும், இழிவுபடுத்தியும் பாடுபடுவதுபோல இருப்பதாக விமர்சனம் செய்தனர். பவன் சிங்குக்கு இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

தவிர, மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலி தொகுதியில் நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திரிணமூல் கட்சியை பாஜக விமர்சித்து வரும் நிலையில், பவன் சிங்கை வேட்பாளராக நிறுத்துவதை பாஜக தலைமையும் விரும்பவில்லை. இதையடுத்து, போட்டியில் இருந்து விலகுமாறு பவன் சிங்கை பாஜக அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, எக்ஸ்தளத்தில் பவன் சிங் வெளியிட்டபதிவில், ‘என் மீது நம்பிக்கை வைத்து வேட்பாளராக அறிவித்த பாஜக தலைமைக்கு நன்றி. சில காரணங்களால், அசான்சோல் தொகுதியில் என்னால் போட்டியிட முடியாது’ என தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மக்களின் உறுதியான நிலைப்பாட்டால் அவர் விலகிவிட்டதாக திரிணமூல் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.