'இன்சாட் 3 டி.எஸ்' செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிநவீன கருவிகளுடன் பிரத்யேகமாக காலநிலை மற்றும் வானிலை தரவுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்காக ‘இன்சாட் 3 டி.எஸ்’ என்ற செயற்கைகோளை தயாரித்தது. அதனை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் கடந்த பிப்ரவரி 17-ந்தேதி விண்ணில் ஏவியது.

இந்த செயற்கைகோளில், 6 சேனல் இமேஜர் மற்றும் 19 சேனல் சவுண்டர் கருவிகள் வானிலை ஆய்வுகளுக்காகவும், உயர்தர தரவுகளை சேகரிப்பதற்காகவும், செயற்கைகோள் உதவி, தேடல் மற்றும் மீட்பு டிரான்ஸ்பாண்டர் அனுப்பப்பட்டது. அத்துடன் இந்த செயற்கைகோளில் டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டர் (டி.ஆர்.பி.) போன்ற வித்தியாச தகவல் தரும் கருவிகளும் அதில் இடம்பெற்றிருந்தது. இந்த கருவி தானியங்கி தரவு சேகரிப்பு தளங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களிலிருந்து தரவுகளை அளிக்கும். அத்துடன் நிலம் மற்றும் கடல் பரப்புகளை கண்காணிக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. இதுபற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

இன்சாட்-3டி.எஸ், வானிலை செயற்கைக்கோள், புவி இமேஜிங் செயல்பாடுகளைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. வானிலை பேலோடுகளின் முதல் தொகுப்பு படங்களை (6-சேனல் இமேஜர் மற்றும் 19-சேனல் சவுண்டர்) கடந்த 7-ந்தேதி எடுத்து அனுப்பியது. இந்த செயற்கைகோளில் உள்ள அனைத்து கருவிகளும் செயல்பட தொடங்கி உள்ளது.

குறிப்பாக இதில் உள்ள 6-சேனல் இமேஜர் கருவி பல நிறமாலை சேனல்கள் அல்லது அலைநீளங்களில் பூமியின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தின் படங்களைப் எடுத்து அனுப்பி உள்ளது. மேகங்கள், ஏரோசல்கள், நில மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் நீராவி வினியோகம் போன்ற பல்வேறு வளிமண்டல மற்றும் மேற்பரப்பு நிகழ்வுகள் பற்றிய தகவல்களை சேகரித்து உள்ளது.

19-சேனல் ஒலிப்பான் பூமியின் வளிமண்டலத்தால் வெளிப்படும் கதிர்வீச்சைக் கவனமாகப் பிடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட சேனல்கள் மூலம் வெவ்வேறு வளிமண்டலக் கூறுகள் மற்றும் நீராவி, ஓசோன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற வாயுக்கள் போன்ற பண்புகளால் வெளிப்படும் கதிர்வீச்சை படம் எடுத்து அனுப்பி உள்ளது. அந்த புகைப்படங்கள் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் உள்ள கருவிகள் கடல் மேற்பரப்பு வெப்பநிலை, மழைப்பொழிவு, நில மேற்பரப்பு வெப்பநிலை, மூடுபனி தீவிரம், வெளிச்செல்லும் நீண்ட அலை கதிர்வீச்சு, மேல் வெப்பமண்டல காற்று, மேகக் காற்றழுத்தம், ஈரப்பதம் போன்ற 40-க்கும் மேற்பட்ட புவி இயற்பியல் தரவு தயாரிப்புகளை உருவாக்குகின்றன. சேகரிக்கப்பட்ட தரவு வளிமண்டலத்தின் செங்குத்து அமைப்பு பற்றிய தகவல்களை அளிக்கிறது. வானிலை முன்னறிவிப்பு, காலநிலை கண்காணிப்பு மற்றும் வளிமண்டல செயல்முறைகளைப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.