நாடாளுமன்றத்தை கூட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நல்ல செய்தி வெளியே செல்லும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசினார்.

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்களை விவரித்த ராஜ்நாத் சிங், “இந்திய ராணவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்தியா பதிலடி கொடுக்கும். நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்” என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இக்கூட்டத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ஒரு நல்ல செய்தி வெளியே செல்லும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்ததாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார். மேலும், ஒரு கூட்டத்தொடர் கூட்டப்பட்டால், எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்று குறிப்பிட்ட கார்கே, எனினும் அரசாங்கம் அதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கும் ஆயுதப்படைகளுக்கும் ஆதரவைத் தெரிவித்தன. இண்டியா கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் மற்ற கட்சிகளும் ஒரே குரலில் பேசின. “நீங்கள் முன்னேறுங்கள், நீங்கள் எடுக்கும் முடிவுகளில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், ராணுவத்துடன் நிற்கிறோம்” என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கூறின.

இது ஒரு முக்கியமான நேரம் என்றும், நாட்டின் நலனுக்காக, பாதுகாப்பு ரகசியங்கள் போன்ற விரிவான கேள்விகளைக் கேட்கக்கூடாது என்றும் பாதுகாப்பு அமைச்சர் (ராஜ்நாத் சிங்) கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு குறித்த பிரச்சினையையும் எழுப்பினர். ஜம்மு-காஷ்மீரில் பீரங்கிக் குண்டுகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து சுருக்கமாகப் பேச வேண்டும் என்றும் நாங்கள் விரும்பினோம். துணிச்சலை வெளிப்படுத்திய வீரர்களுக்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம். அவர் (மோடி) வந்து எங்களுக்கு விளக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், ஆனால் அவர் வரவில்லை.” என்று தெரிவித்தார்.

இன்று காலை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அரசுத் தரப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சிகள் சார்பில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் எம்பி சந்தீப் பந்தோபாத்யாய, திமுக எம்பி டி.ஆர்.பாலு, சமாஜ்வாதி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், சிவ சேனா(யுபிடி) எம்பி சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ்(எஸ்பி) எம்பி சுப்ரியா சுலே, பிஜூ ஜனதா தள எம்பி சஸ்மித் பத்ரா, சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ், ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா, ஏஐஎம்ஐஎம் எம்பி அசாதுதின் ஒவைசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.