
தவறாக நடக்க முயன்ற டிரைவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளதாக நடிகை மாணவ் நாயக் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தி, மராத்திய மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை மாணவ் நாயக், முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் மும்பையில் இரவு வீட்டுக்கு வாடகை காரில் சென்றுள்ளார். அப்போது ஓட்டுநர் போன் பேசிக்கொண்டே கார் ஓட்டியுள்ளார்.
ஒரு இடத்தில் சிக்னலை மீறியதால் போலீசார் காரை புகைப்படம் எடுத்தனர். இதனையடுத்து ஓட்டுநர் அவர்களுடன் வாக்குவாதம் செய்தார். நடிகை தலையிட்டு போட்டோ எடுத்துவிட்டார்கள் இனி பேசி பயன் இல்லை என்று கூறியுள்ளார்.

அங்கிருந்து புறப்பட்டதும் போலீசார் விதித்த ரூ.500 அபராத தொகையை கொடுப்பீர்களா என்று ஓட்டுநர் கோபமாக நடிகையிடம் கத்தியுள்ளார். பணத்தை தராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் போலீஸ் நிலையத்துக்கு போகுமாறு நடிகை ஓட்டுநரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் வேறு வழியாக காரை வேகமாக ஓட்டிச்சென்றுள்ளார். இதனால் பயந்துபோய் நடிகை காரை நிறுத்த சொல்லி கூச்சலிட்டார்.
சத்தத்தை கேட்டு இரண்டு பைக்கும், ஒரு ஆட்டோ ரிக் ஷாவும் காரை மறித்து அவரை காப்பாற்றியுள்ளனர். அந்த அனுபவம் தன்னை நடுங்கச் செய்வதாக நடிகை கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in