1934-ல் மேற்கு வங்கத்தில் பிறந்த டாக்டர் திலீப் மஹாலனாபிஸ் கொல்கத்தா மற்றும் லண்டனில் படித்தார், மேலும் 1960 களில் கொல்கத்தாவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான சர்வதேச மையத்தில் சேர்ந்தார். அங்கு அவர் மருத்துவர்கள் டேவிட் ஆர் நளின் மற்றும் ரிச்சர்ட் ஏ கேஷ் ஆகியோருடன் இணைந்து வாய்வழி மறுசீரமைப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி மேற்கொண்டார்.
அவர்களுடைய தீவிர முயற்சியால் ‘ஓரல் ரீஹைட்ரேஷன் சொலூஷன்’ (ஓஆர்எஸ்) என்றழைக்கப்படும் உப்பு கரைசல் கண்டுபிடிக்கப்பட்டது. ஓஆர்எஸ் என்பது சோடியம், பொட்டாசியம் மற்றும் சிட்ரிக் ரசாயனங்கள் கலந்த உப்பு கரைசல் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வங்கதேசத்தில் கடந்த 1971-ல் நடைபெற்ற போரால் அங்கிருந்து ஒரு கோடி பேருக்கும் மேற்பட்டோர் மேற்குவங்கத்துக்குள் அகதிகளாக வரத் தொடங்கினர். அவர்கள் தங்கியிருந்த முகாம்களில் காலரா பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏராளமானார் உயிரிழந்த வண்ணம் இருந்தனர். அந்த நேரத்தில் நீரிழப்பு ஏற்பட்ட ஏராளமானோருக்கு மருத்துவர் திலீப் கண்டுபிடித்த ஓஆர்எஸ் உப்பு கரைசல் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்தன.
அகதிகள் முகாமில் காலராவால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயிரிழப்பு குறைந்தது. அதன்பின்னர் 20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக ஓஆர்எஸ் பிரபலமானது. மேலும், கொலம்பியா பல்கலைக்கழகம், தாய்லாந்து அரசு உட்பட பல்வேறு நாடுகள் திலீப்பை கௌரவித்து பரிசுகள் வழங்கின. இதனால் மருத்துவர் திலீப் பெயரை அன்பாக ஓஆர்எஸ் என்றே அழைத்தனர்.
இந்நிலையில், நுரையீரல் தொற்று மற்றும் பிற வயது தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்த அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மருத்துவர்கள், பிரமுகர்கள் ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஐசிஎம்ஆர் இயக்குநர் சாந்தா தத்தா கூறும்போது, ”ஓஆர்எஸ் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு. மருத்துவர் திலீப் மகாலனபிஸ் கண்டுபிடிப்பு மகத்தானது. உலகளவில் ஓஆர்எஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது வங்கதேச போரின் போது காலராவால் ஏற்பட்ட உயிரிழப்புகளை கணிசமாகக் குறைத்தது” என்று புகழாரம் சூட்டினார்.
கொல்கத்தாவில் குழந்தைகள் நல மையத்தில் முதன்முதல் பணியைத் தொடங்கினார் மருத்துவர் திலீப். அந்த மையத்துக்கு ரூ.1 கோடியை நன்கொடையாகவும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.